விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய இளம் வீரர் திலக் வர்மா பந்துவீசும் போது செய்த ஒரு செயல், எதிரணி வீரரை ஆட்டம் காண வைத்தது. நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த மேத்யூ பிரீட்ஸ்கேவுக்கு, திலக் வர்மா மன்கட் எச்சரிக்கை விடுத்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பந்துவீச அழைக்கப்பட்ட திலக் வர்மா, தனது இரண்டாவது ஓவரை வீசினார்.

ஆட்டத்தின் 24-வது ஓவரின் 3-வது பந்தை வீச திலக் வர்மா ஓடி வந்தார். அப்போது நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே, ரன் ஓடும் ஆர்வத்தில் பந்து வீசப்படுவதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியே நகர்ந்தார்.
இதை கவனித்த திலக் வர்மா, பந்தை வீசாமல் திடீரென கிரீஸில் நின்றார். உடனே ஸ்டம்பை நோக்கித் திரும்பி, பெயில்ஸை (Bails) கழற்றுவது போல பாவனை செய்தார். திலக் வர்மா திடீரென நின்றதும், ஐயோ 'மன்கட்' செய்துவிடுவாரோ என்று பயந்துபோன பிரீட்ஸ்கே, அவசரமாக பேட்டை கிரீஸுக்குள் வைத்தார்.
ஆனால், திலக் வர்மா அவரை அவுட் செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக, முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். "இன்னொரு முறை இப்படி வெளியே வராதீங்க" என்பது போல சைகை காட்டிவிட்டு, மீண்டும் பந்துவீசச் சென்றார். இது விக்கெட் வீழ்த்தும் முயற்சி இல்லை என்றாலும், பேட்ஸ்மேனின் கவனத்தைச் சிதறடிக்கவும், அவரை கிரீஸுக்குள் இருக்க வைக்கவும் திலக் வர்மா கையாண்ட ஒரு உளவியல் உத்தியாகவே பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்தத் தொடரில் மேத்யூ பிரீட்ஸ்கே களத்தில் செய்யும் சில செய்கைகள் இந்திய வீரர்களை எரிச்சலூட்டியுள்ளது. விராட் கோலி கூட அவரைப் போல செய்து கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில், அவர் ஆர்வக்கோளாறில் கிரீஸை விட்டு நகர்வதைத் தடுக்கவே திலக் வர்மா இந்த 'செக்' வைத்தார்.
அந்த நேரத்தில் குயின்டன் டி காக் மறுமுனையில் சிறப்பாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்தார். இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய சூழலில், திலக் வர்மாவின் இந்தச் செயல் மைதானத்தில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது. பின்னர், தென்னாப்பிரிக்கா 47.5 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.