IND vs SA: நம்ப முடியாத ரெக்கார்டு.. கோலி, கில் சாதனையை உடைத்த திலக் வர்மா.. 4000 ரன்கள் குவித்தார்
தர்மசாலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுத் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்த வெற்றியுடன் சேர்த்து, இளம் வீரர் திலக் வர்மா முக்கிய மைல்கல் சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி திலக் வர்மா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திலக் வர்மா: 4000 ரன்கள் சாதனை
3-வது டி20 போட்டியில் 3-வது வீரராகக் களமிறங்கிய திலக் வர்மா, ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் + சர்வதேச போட்டிகள் சேர்த்து 4,000 ரன்களை கடந்தார். வெறும் 125 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 4000 டி20 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதிவேகமாக 4000 டி20 ரன்களைக் கடந்த இந்தியர்கள்:
- ருதுராஜ் கெய்க்வாட் - 116 இன்னிங்ஸ்
- கே.எல். ராகுல் - 117 இன்னிங்ஸ்
- திலக் வர்மா - 125 இன்னிங்ஸ்
- சுப்மன் கில் - 129 இன்னிங்ஸ்
- விராட் கோலி - 138 இன்னிங்ஸ்
இதன் மூலம் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரை விடக் குறைவான இன்னிங்ஸ்களில் திலக் வர்மா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா: உலகின் முதல் வீரர்!
மற்றொரு பக்கம், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஒரு இமாலயச் சாதனையைப் படைத்தார். தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டைப் பதிவு செய்தார்.
இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்ற வரலாற்றை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இதற்கு முன் ஷகிப் அல் ஹசன், முகமது நபி போன்றோர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும், அவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 சிக்ஸர்கள் அடித்த உலகின் 4-வது வீரர் என்ற பெருமையையும் பாண்டியா பெற்றார்.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 117 ரன்களுக்குச் சுருண்டது. அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை விரட்டிய இந்தியா, அபிஷேக் சர்மா (35), சுப்மன் கில் (28), திலக் வர்மா (25*) ஆகியோரின் பங்களிப்பால் 15.5 ஓவர்களில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications