10 சிக்ஸர்கள், 9 பவுண்டரி.. தென்னாப்பிரிக்காவைத் துவம்சம் செய்த இந்திய கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி
பெனோனி: தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி அபாரமாக ஆடித் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில், இந்திய அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய இளம்படை சாதனை படைத்துள்ளது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது தென்னாப்பிரிக்கா. ஆனால், அந்த முடிவு அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டனும், 14 வயதே ஆன இளம் நட்சத்திரமுமான வைபவ் சூர்யவன்ஷி, தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

வெறும் 74 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 127 ரன்களைக் குவித்து மிரட்டினார். இதில் 9 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். ஏற்கனவே இரண்டாவது போட்டியில் 24 பந்துகளில் 68 ரன்கள் விளாசியிருந்த வைபவ், இந்த ஆட்டத்தில் தனது மூன்றாவது யூத் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து உலகக் கோப்பைக்குத் தயாராக உள்ளதை நிரூபித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்குத் துணையாக, மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜும் அபாரமாக விளையாடினார். 106 பந்துகளில் 118 ரன்கள் குவித்த அவர், வைபவ் உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார்.
இவர்களின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் என்ற மலைக்க வைக்கும் ஸ்கோரை எட்டியது. 394 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய தென்னாப்பிரிக்க அணி, இந்தியப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
தொடக்கத்திலேயே இந்தியப் பந்துவீச்சாளர் கிஷன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்தார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 233 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
விரைவில் அண்டர்-19 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க மண்ணில் அந்நாட்டை 'வைட்வாஷ்' செய்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. 18 போட்டிகளில் 973 ரன்கள் குவித்து, 164 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டும் வைபவ் சூர்யவன்ஷி, உலகக் கோப்பையில் எதிரணிகளுக்குப் பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications