பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. பார்பிடாஸ் பகுதியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இரண்டு பவுண்டரிகள் அடிக்க ரசிகர்கள் குஷியாக இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கேசவ் மகாராஜ் பந்தை அடிக்க முயன்று கிளாசனிடம் ரோகித் சர்மா ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார். இது நடந்த அதே ஓவரில் ரிஷப் பன்ட் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதேபோன்று இந்தியாவின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவும் மூன்று ரன்களில் வெளியேற இந்திய அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் இந்தியாவின் கதை அவ்வளவுதான் என்று ரசிகர்கள் தொலைக்காட்சியை ஆப் செய்ய சென்றனர். அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் அக்சர் பட்டேலுக்கு ப்ரோமோஷன் வழங்கப்பட்டது.தன்னுடைய திறமையை அக்சர் பட்டேல் என்று வெளிப்படுத்தினார். நெருக்கடியான கட்டத்தில் அதிரடியாக விளையாடி அக்சர் பட்டேல் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். இதில் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 31 பந்துகளில் அக்சர்பட்டேல் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். சிலருக்கு விராட் கோலி முதலில் அமைதியாக விளையாடி கம்பெனி கொடுத்தார். அக்சர் பட்டேல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இதனை அடுத்து விராட் கோலி தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். 48 பந்துகளில் விராட் கோலி அரைசதம் பூர்த்தி செய்ய அடுத்த 11 பந்துகளில் விராட் கோலி மேலும் 26 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்கா அதி பயங்கர வீரரான ரபாடா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விராட் கோலி பறக்க விட்டார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. விராட் கோலி 90 ரன்கள் மேல் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடித்து ஆட முற்பட்டு கோலி ஆட்டம் இழந்தார்.கோலி 59 பந்துகளை எதிர் கொண்டு 76 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.இதேபோன்று இந்த தொடர் முழுவதும் சொதப்பிய சிவம் துபே திடீரென்று அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.