விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பேட்டிங்கில் அசத்தினார். தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 45 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 65 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும்.
இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு சதம் அடித்து இருந்த விராட் கோலி, தற்போது ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் அடித்த விராட் கோலி, இந்த தொடரின் நாயகன் விருதை 12வது முறையாக கைப்பற்றினார்.

இது குறித்து பேசிய விராட் கோலி, நான் இந்த தொடரில் விளையாடிய விதம் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இருக்கின்றது. என் மனதில் நான் சுதந்திரமாக எந்த ஒரு நெருக்கடியும் இன்றி விளையாடுகின்றேன். இதனால் என்னுடைய விளையாட்டு எனக்கு மீண்டும் ஒருங்கிணைந்து வருகின்றது.
எனக்கு என நான் நிர்ணயித்த தரத்திற்கு ஏற்ப விளையாட முயற்சி செய்தேன். இதன் மூலம் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என்னால் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியும் சூழலுக்கு ஏற்ப விளையாட முடியும். நான் 16 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட்டின் விளையாடி இருக்கின்றேன்.
இதில் பல சமயங்கள் என் மீது எனக்கு சந்தேகம் வரும். சில சமயம் பதற்றமாக இருந்திருக்கின்றேன். ஒரு தவறு செய்தாலே, அது நமக்கு எதிராக மாறிவிடும். இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்று ஒரு நல்ல பேட்டராகவும், மனிதனாகவும் மாறி இருக்கின்றேன். நான் எதிர்மறையாக எப்படி யோசிக்கின்றேன் என்பதை புரிந்து கொண்டேன்.
எனவே அதிலிருந்து விடுபட்டு எப்படி பொறுமையுடன் உழைத்து ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற வலியையும் கண்டுபிடித்தேன். அணிக்காக வெற்றியில் பங்களிக்க முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். நான் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி விளையாடினால் நிச்சயம் என்னால் சிக்ஸர்களை அடிக்க முடியும். என்னுடைய எல்லைகளை தகர்த்து எறிந்து மேலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்கின்றேன்.
ராஞ்சியில் நடந்த முதல் இன்னிங்ஸில் தான்,இந்த தொடரில் என்னுடைய பெஸ்ட் என்று கூறுவேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு நான் எந்தவித போட்டியிலும் விளையாடாமல் ராஞ்சியில் களமிறங்கினேன். அன்று நான் உணர்ந்த எனர்ஜி மூலம் நான் ரிஸ்க் எடுத்து ஷாட்களை விளையாடினேன்.
அது கடந்த சில காலமாக நான் உணராத ஒரு புதிய உணர்வை எனக்கு பேட்டிங்கில் வழங்கியது. இதுவரை எப்படி போட்டிகள் சென்றது என்பதை நினைத்து நான் நன்றியுணர்வுடன் இருக்கின்றேன். எப்போதுமே வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற போட்டிகள் எங்களுக்குள் உள்ள சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர உதவும். நான் தொடர்ந்து விளையாட ஆசைப்படுகின்றேன்.நானும், ரோகித் சர்மாவும் அணியின் வெற்றிக்கு இன்னும் உதவுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன் என விராட் கோலி கூறியுள்ளார்.