IND vs SA: 7 ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடித்து இந்தியா தோற்றதே இல்லை ஆனால்.. புள்ளிவிவரம் என்ன?
ராய்ப்பூர்: விராட் கோலி சதம் அடித்தாலே இந்தியா ஜெயித்துவிடும் என்ற நீண்ட கால நம்பிக்கை, ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தகர்க்கப்பட்டுள்ளது. சுமார் 2462 நாட்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி சதம் அடித்த ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
ராய்ப்பூரில் நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி 93 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்கள் மற்றும் ராகுல் 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட இந்தியா 358 ரன்கள் குவித்தது. ஆனால், பந்துவீச்சு சொதப்பலால் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்து, அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைவது மிக அரிதான விஷயம். கடைசியாக இப்படி ஒரு சம்பவம் எப்போது நடந்தது தெரியுமா?
மார்ச் 8, 2019 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சி மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி 123 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றது. சுவாரஸ்யமாக, அதுதான் எம்.எஸ்.தோனி இந்திய மண்ணில் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியாகும்.
அதன் பிறகு கடந்த 2462 நாட்களாக, விராட் கோலி எப்போதெல்லாம் சதம் அடித்தாரோ, அப்போதெல்லாம் இந்தியா வெற்றி பெற்றது அல்லது போட்டி டிராவில் முடிந்தது. ஆனால், நேற்று அந்த ராசி உடைந்து, இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
புள்ளிவிவரம் சொல்வது என்ன?
விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்கள் அடித்துவிட்டார்.
அதில் வெறும் 14 முறை மட்டுமே அவர் சதம் அடித்தும் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 53 சதங்களில், வெறும் 8 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. மீதமுள்ள 45 போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றியே எழுதப்பட்டுள்ளது.
சச்சின் vs கோலி
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடும்போது, கோலியின் சதங்கள் அதிக வெற்றியைத் தேடித் தந்துள்ளன. சச்சின் டெண்டுல்கர் தனது கெரியரில் 100 சதங்கள் அடித்தார். அதில் 25 சதங்கள் தோல்வியில் முடிந்தன. ஆனால் விராட் கோலிக்கு அந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக மட்டுமே உள்ளது.
நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா 359 ரன்களை வெற்றிகரமாகத் துரத்தி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. கோலியின் சதம் வீணானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது ஃபார்ம் இந்தியாவுக்குப் பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications