அவுட்டான உடன் கோலி செய்த செயல்.. கடைசி மேட்ச்? மைதானமே எழுந்து நின்ற தருணம்.. நெகிழ வைத்த சம்பவம்
ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து விராட் கோலி மிரட்டினாலும், அவர் ஆட்டமிழந்து வெளியேறிய விதம் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது. தோனியின் ஊரான ராஞ்சியில், விராட் கோலி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுதான் என்பது போல அவர் செய்த செயல் அமைந்தது. .
ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 120 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்ஸர்களுடன் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் வலுவான நிலையில் இருந்தது. 43-வது ஓவரை தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் நாண்ட்ரே பர்கர் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில், கோலி தூக்கி அடிக்க முயன்று கவரில் நின்ற ரிக்கல்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வழக்கமாக அவுட் ஆனால் விரக்தியுடன் அல்லது கோபத்துடன் வெளியேறும் கோலி, இன்று முற்றிலும் மாறுபட்டவராகக் காணப்பட்டார். பெவிலியன் திரும்பும்போது, மைதானத்தின் நான்கு திசைகளிலும் தனது பேட்டை உயர்த்தி, ரசிகர்களை நோக்கி கையசைத்து விடைபெற்றார்.
இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். விராட் கோலியின் இந்தச் செய்கை, ராஞ்சி மைதானத்தில் அவர் ஆடும் கடைசி சர்வதேச போட்டி இதுதான் என்பதை சூசகமாக உணர்த்துவது போல் இருந்தது.
2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற இருக்கிறார் விராட் கோலி. இதற்கிடையே ராஞ்சியில் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி ஒதுக்கப்படுவது கடினமே. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20-யில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, இனி ராஞ்சியில் தான் ஆடப் போவதில்லை என்பதையே இவ்வாறு உணர்த்தி இருக்கிறார்.
ராஞ்சி என்பது கோலியின் இணையில்லா குருவான எம்.எஸ்.தோனியின் சொந்த ஊர். போட்டிக்கு முன்பு கூட தோனியைச் சந்தித்து அவரது காரில் வலம் வந்தார். தனது குருவின் ஊரில், ஒரு பிரம்மாண்ட சதத்துடன் விடைபெறுவதை விடச் சிறந்த தருணம் கோலிக்குக் கிடைக்காது.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா 57 ரன்கள் எடுத்து அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, விராட் கோலி 135 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் 60 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோராக உயர்த்தினர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.


Click it and Unblock the Notifications