IND vs SA: "மனைவிக்காக அந்த முத்தம்.." சதம் அடித்ததும் கோலி செய்த செயல்! உருகிய அனுஷ்கா சர்மா
ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்த பிறகு, தனது திருமண மோதிரத்தை முத்தமிட்டு கொண்டாடிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா உடனடியாக பதில் பதிவிட்டுள்ளார்.
ராய்ப்பூரில் நடந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒருமுறை தனது பேட்டிங் திறனை காட்டினார். 93 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 53-வது சதத்தைப் பதிவு செய்தார். ராஞ்சி போட்டியைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது போட்டிலும் சதம் அடித்து, "கிங்" என்பதை நிரூபித்துள்ளார்.

மோதிரத்திற்கு முத்தம்
விராட் கோலி சதம் அடித்த அந்த வினாடி, மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்தது. ஹெல்மெட்டைக் கழற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி, தனது கழுத்தில் சங்கிலியில் கோர்த்து அணிந்திருந்த திருமண மோதிரத்தை எடுத்து முத்தமிட்டார்.
ஒவ்வொரு முறை தான் சாதிக்கும் போதும், அதற்குத் துணையாக இருக்கும் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு அந்த வெற்றியைச் சமர்ப்பிப்பதை கோலி வழக்கமாக வைத்துள்ளார். நேற்றைய போட்டியிலும் அந்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது.
உருகிய அனுஷ்கா சர்மா
கோலியின் இந்தச் அன்பான செயலைப் பார்த்த அனுஷ்கா சர்மா, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் பதிவு செய்துள்ளார். கோலி சதம் அடித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனுடன் இதயம் மற்றும் கைதட்டும் சின்னத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியையும் காதலையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தருணத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம், கோலியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த முன்னாள் வீரர் இர்பான் பதான், ட்விட்டரில் (X தளம்) ஒரு சுவாரஸ்யமான பதிவைப் போட்டுள்ளார்.
"ஞாயிற்றுக்கிழமை என்றால் 'கிங்' நிச்சயம் ஆடுவார்.. ஆனால் வார நாட்களில் அவர் உங்கள் திட்டங்களை வைத்து விளையாடுவார். விராட் கோலியின் அற்புதமான சதம்" என்று கோலி ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்பதால் நம்மால் வார நாட்களில் வேலைகளை செய்ய முடியாமல் போகிறது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து இருந்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து தனது உச்சகட்ட ஃபார்மை நிரூபித்துள்ளார். இதை அடுத்து அவர் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும், பிசிசிஐ அவருக்கு அதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கூறத் துவங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications