மும்பை: கிரிக்கெட் மைதானத்தில் நமாஸ் செய்ய வேண்டுமென்றால் என்னை யாரும் தடுக்க போவதில்லை என்றும், இந்தியனாகவும், இஸ்லாமியனாகவும் பெருமை கொள்வதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, மைதானத்தை தொட்டு கும்பிடுவது போல் காணப்பட்டார்.

அப்போது முகமது ஷமி மைதானத்தில் நமாஸ் செய்ய முயன்றதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு பெருமைமிக்க இஸ்லாமியர் மற்றும் இந்தியர். நான் நமாஸ் செய்ய வேறு ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றால் நான் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவேன். நான் நமாஸ் செய்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று காட்டமாக பேசியிருக்கிறார். ஷமியின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அண்மை காலங்களில் இந்திய அணியின் முகமது ஷமி இஸ்லாமியர் என்ற காரணத்தினாலேயே அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. அப்போது இஸ்லாமியர் என்பதால் ஷமி சரியாக விளையாடவில்லை என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் சில நபர்களால் விமர்சிக்கப்பட்டார். அப்போது முகமது ஷமிக்கு ஆதரவாக, விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார்.
அதேபோல் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முகமது ஷமியை குறி வைத்து சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்பினார்கள். ஆனால் ரசிகர்களின் கோஷத்தை கண்டுகொள்ளாத முகமது ஷமி, விளையாட்டில் கவனம் செலுத்தினார். ரசிகர்கள் கோஷம் இஸ்லாமியர்களான ஷமி மற்றும் சிராஜை நோக்கியே இருந்தது. ஆனால் இதுகுறித்து கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடம் கேட்ட போது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று பதிலளிக்காமல் சென்றார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி நமாஸ் செய்ய முயன்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாகவே முகமது ஷமி அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில், நான் பெருமைமிகு இஸ்லாமியர் மற்றும் இந்தியர் என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.