சாம்சன் - திலக் வர்மா சம்பவம்.. 86 பந்துகளில் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. 283 ரன்கள் குவித்த இந்தியா!
ஜொகன்னஸ்பர்க்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கடந்த 2 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்தப் போட்டியில் அவர் நிதானமாக தொடங்கினார். முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரிலேயே சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அதிரடிக்கு திரும்பினார். இன்னொரு பக்கம் அபிஷேக் சர்மா 5வது ஓவரை வீசிய சிமிலானே பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் 5 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 68 ரன்களாக உயர்ந்தது.

பின்னர் சிபாம்லா வீசிய 6வது ஓவரில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் - திலக் வர்மா கூடட்ணி இணைந்தது. அப்போது உடனடியாக ஸ்பின்னர்களான மஹாராஜ் மற்றும் மார்க்ரம் இருவரும் அட்டாக்கில் வந்து ரன் ரேட்டை குறைத்தனர். இதனை புரிந்து கொண்ட திலக் வர்மா 9வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சரை விளாசி அசத்தினார். அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்டப்ஸ் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்ஸ் விளாசி சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட, 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 129 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிக்சர்களை விளாசி தள்ளினர்.
பின்னர் 11வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 13 ரன்கள் விளாச, 12வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து மார்க்ரம் வீசிய 14வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனிடையே இளம் வீரர் திலக் வர்மா 22 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் இந்திய அணி 14.1 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.
பின்னர் கோட்ஸி வீசிய 15வது ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஃபீல்டர்கள் தவறவிட்டனர். தொடர்ந்து இவர்களின் பார்ட்னர்ஷிப் 64 பந்துகளில் 150 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து இருவரும் 90 ரன்களுக்கு மேல் குவித்து களத்தில் இருந்தனர். தொடர்ந்து சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் சதமடிக்க, மற்றொரு பக்கம் திலக் வர்மா 41 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தனர்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய திலக் வர்மா 47 பந்துகளில் 10 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 120 ரன்களும், சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 109 ரன்களும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 86 பந்துகளுக்கு 210 ரன்கள் குவித்துள்ளனர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக இந்திய அணி 23 சிக்ஸ், 17 பவுண்டரி விளாசியுள்ளது.


Click it and Unblock the Notifications