Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள்.. சஞ்சு சாம்சன் சதத்தால் தப்பிய இந்திய அணி.. 202 ரன்கள் குவிப்பு!

டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்களை விளாசி அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், பிட்சில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தும் நோக்கில் பவுலிங்கை தேர்வு செய்தனர்.

ind vs sa sanju samson suryakumar yadav

இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய இருவரும், 2வது ஓவரிலேயே பவுண்டரிகளை விளாச தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் பறந்தன.

இதன் காரணமாக 6 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 56 ரன்களாக உயர்ந்தது. பின்னர் மஹாராஜ் வீசிய 7வது ஓவரில் இருவரும் நிதானம் காட்ட, அடுத்த ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் 9வது ஓவரை வீச வந்த பேட்ரிக் க்ரூகர் அந்த ஓவரில் மட்டும் 11 பந்துகளை வீசினார். 3 ஒய்டுகள், 2 நோ-பால் என்று 11 பந்துகளில் 15 ரன்களை விட்டுக் கொடுத்ததோடு, சூர்யகுமார் யாதவை 21 ரன்களில் வீழ்த்தினார்.

சூர்யகுமார் யாதவ் பெவிலியன் திரும்பினாலும் சஞ்சு சாம்சனின் அதிரடி சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ் விளாசுவதை கட்டாயமாக செய்து வந்தார். இன்னொரு பக்கம் திலக் வர்மா அதிரடி காட்ட, 12 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை குவித்திருந்தது. இதன்பின் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதத்தை விளாசி சாதனை படைத்தார்.

தொடர்ந்து மஹாராஜ் பவுலிங்கில் திலக் வர்மா 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே சஞ்சு சாம்சனும் 50 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 107 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்திருந்தது.

இதனால் கடைசி ஓவரில் அக்சர் படேல் - அர்ஷ்தீப் சிங் கூட்டணி களத்தில் இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அக்சர் படேல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் ரவி பிஷ்னாய் ரன் அவுட்டானார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்ததோடு, வெரும் 35 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றதோடு, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Friday, November 8, 2024, 22:24 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+