மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பல பரிட்சை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் கிளைமாக்ஸ் தற்போது நெருங்கி விட்டது.
மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக உலகக்கோப்பை தொடரில் இறுதி கட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கிய செபாலி வர்மா 87 ரன்களும், தீப்திஷர்மா 58 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த நிலையில் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டியில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமை தற்போது இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பு 2022 மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது சாதனையாக தொடர்கிறது. தற்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், தென்னாபிரிக்க அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் மாபெரும் ஒரு உலக சாதனையை படைக்க வேண்டும்.
அதாவது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 167 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததே உச்சபட்ச சாதனையாகும். இறுதிப்போட்டியில் இலக்குகளை சேஸ் செய்வது என்பது மிகவும் கடினம். காரணம் கடும் அழுத்தத்தை சமாளித்து வீராங்கனைகள் விளையாட வேண்டும்.
இதனால் இந்தியா நிர்ணயத்த 299 என்ற இலக்கை எட்ட வேண்டுமென்றால் தென்னாப்பிரிக்கா வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாட வேண்டும்.
இதன் காரணமாக வரலாறு இந்தியாவுக்கு சாதகமாகவே தற்போது இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இந்திய வீராங்கனை ரிச்சா கோஸ் 12 சிக்சர் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர் விளாச வீராங்கனை என்ற பெயரை அவர் படைத்திருக்கிறார்