நவி மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் விடுத்துள்ள சவால், கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்களின் கூட்டத்தை அமைதியாக்க விரும்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறிய வார்த்தைகளை அப்படியே எதிரொலிக்கிறது. அன்று அகமதாபாத்தில் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் கோப்பையை வென்று, மைதானத்தை நிசப்தமாக்கிய கம்மின்ஸின் கூற்றை, இன்று வோல்வார்ட் நினைவுபடுத்தியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த வோல்வார்ட், "சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். மைதானம் முழுவதும் அவர்களது ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு அற்புதமான வாய்ப்பு, ஆனால் அதே நேரத்தில், சொந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.
இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, வோல்வார்ட் புன்னகையுடன், "நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அதுவே அவர்களை அமைதியாக்கும் என்று நினைக்கிறேன்," என்று பதிலளித்தார். இந்த ஒற்றை வரி, இறுதிப் போட்டிக்கான விறுவிறுப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்திய அணியை சாதாரணமாக எடைபோடவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். "நாக்-அவுட் போட்டிகள் லீக் ஆட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் ஆட்டத்தைப் போல, நாக்-அவுட் போட்டிகளில் வீரர்கள் சில மாயாஜாலங்களை நிகழ்த்துவார்கள். இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும் ஒரு பலம் வாய்ந்த அணி. அவர்களை வீழ்த்த நாங்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்" என்றார் வோல்வார்ட்.
தனது அணி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் அழுத்தம் குறித்துப் பேசிய அவர், "மைதானத்தில் அதிக இரைச்சல் இருக்கும், பல விஷயங்கள் நடக்கும். ஆனால், எது நடந்தாலும் இது ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமே. களத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து, அடிப்படைகளைச் சரியாகச் செய்யும் அணியே வெற்றி பெறும். என் அணியை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பேன்" என்று கூறினார்.