IND vs SA Final: இந்திய கேப்டனுக்கு 100 கோடியில் ஒரு ஜாதகம்.. 240 ஆண்டுகளில் கிடைக்கும் அதிசயம்
டெல்லி: 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் இந்திய அணியின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறது. இந்தச் சூழலில், பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, இந்திய அணி கோப்பையை வெல்ல 90 சதவீதம் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் ஜாதகம் "240 ஆண்டுகளில் ஒரு முறை கிடைக்கும் ஒன்று; வரலாறு படைக்கப் பிறந்த ஒன்று" என்று அவர் அடித்துக் கூறியுள்ளார்.
கிரீன்ஸ்டோன் லோபோவின் கணிப்புப்படி, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் ஜாதகம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறியிருக்கிறார். "ஹர்மன்ப்ரீத் கௌருக்கு 100 கோடியில் ஒருவருக்கு அமையும் அபூர்வ ஜாதகம் உள்ளது. அவரது ஜாதகத்தில் புளூட்டோ கிரகம் பூஜ்ஜிய டிகிரியில் அமைந்துள்ளது. இது 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நிகழ்வாகும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்கள், வரலாறு படைக்கவும், இதுவரை யாரும் செய்யாத சாதனைகளைச் செய்யவும் பிறந்தவர்கள்" என்று அவர் விளக்கியுள்ளார்.

மேலும், "அவரது ஜாதகம் அவர் வரலாறு படைக்கும் திறனைக் கொண்டிருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஏழாம் வீட்டில் சக்திவாய்ந்த நெப்டியூன், எட்டாம் வீட்டில் பயணிக்கும் புளூட்டோ மற்றும் சர்வதேச வெற்றிக்கான பன்னிரண்டாம் வீட்டில் வலுவான கிரகம் என அனைத்தும் அவருக்கு சாதகமாக உள்ளது. அவரால் இந்திய அணியை ஒரு மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும்" என்று லோபோ தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கேப்டனின் ஜாதகம்
தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டின் ஜாதகமும் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை லோபோ குறிப்பிட்டுள்ளார். "லாரா வோல்வார்ட்டுக்கு ஒரு அபாரமான ஜாதகம் உள்ளது. அவரது ஜாதகம் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் ஜாதகத்தைப் போல சக்தி வாய்ந்தது. அதனால் அவர் மிகவும் அபாயகரமான வீராங்கனை. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா இருக்கக்கூடாது என்று நான் பயந்ததற்கு இதுவும் ஒரு காரணம்" என்று அவர் குறிப்பிட்டார் லோபோ. அதே சமயம், வோல்வார்ட்டின் ஜாதகத்தை விட ஹர்மன்ப்ரீத்தின் கிரக நிலைகள் பிரகாசமாக இருப்பதால், வெற்றி இந்தியாவுக்கே என்று அவர் கூறுகிறார்.
இந்திய அணியின் ரகசிய பலம் 'கிரே லிசர்ட்ஸ்'
கபில் தேவின் அணிக்கு 'டெவில்ஸ்' என்ற பெயர் இருந்தது போல, ஹர்மன்ப்ரீத் கௌரின் அணியில் 'கிரே லிசர்ட்ஸ்' (Grey Lizards) எனப்படும் ஒரு குழு உள்ளது என்கிறார் லோபோ. "ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கௌர், ராதா யாதவ், ரேணுகா சிங் என அணியில் ஐந்து அல்லது ஆறு 'கிரே லிசர்ட்ஸ்' உள்ளனர். இந்த அமைப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக வரலாறு படைக்கும் வாய்ப்பு உருவாகும்" என்று அவர் ஒரு புதிய கோணத்தை முன்வைத்துள்ளார்.
பயிற்சியாளர்களின் கிரக நிலை
இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முசும்தாரின் ஜாதகமும் வெற்றிக்காகச் சரியாகப் பொருந்தியுள்ளதாக லோபோ கூறுகிறார். "அமோல் முசும்தார் இந்தியாவுக்காக விளையாடவே இல்லை. ஆனால், அவரது கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நிலையில் இருப்பதால், அவரால் இப்போது வரலாறு படைக்க முடியும். தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளரை விட அவரது ஜாதகம் வலிமையானது" என்றார்.
லீக் சுற்றில் அடைந்த தோல்விகளே வெற்றிக்கு அறிகுறி
லீக் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய லோபோ, "சமபலம் வாய்ந்த அணிகள் மோதும்போது, முக்கியமற்ற லீக் போட்டியில் தோற்கும் அணி, முக்கியமான நாக்-அவுட் போட்டியில் வெல்லும். நாம் ஆஸ்திரேலியாவிடம் லீக் சுற்றில் தோற்று, அரையிறுதியில் அவர்களை வீழ்த்தினோம். அதேபோல, தென்னாப்பிரிக்காவிடம் லீக் சுற்றில் தோற்றோம். இப்போது இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications