உலகக்கோப்பையில் 308 ரன் குவித்த இந்திய வீராங்கனை பிரதிகாவுக்கு பதக்கம் தர மறுப்பு.. ஐசிசி விதி என்ன?
மும்பை: இந்திய மகளிர் அணி 2025 உலகக்கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்த அதே சமயம், அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு வெற்றியாளருக்கான பதக்கம் கிடைக்காத நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் போட்டிகளில் பிரதிகா ராவல் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனையாகத் திகழ்ந்த அவருக்கு, ஐசிசியின் விதிமுறைகளின் காரணமாக பதக்கம் மறுக்கப்பட்டுள்ளது.
25 வயதான பிரதிகா ராவல் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக இருக்கிறார். 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அவர் லீக் சுற்றில் அபாரமாக ரன் குவித்தார். ஆனால், பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியின்போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் பாதியிலேயே உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார்.

அந்த காயத்துக்கு முன்பு வரை, பிரதிகா ராவல் லீக் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடி 51.33 என்ற அபாரமான சராசரியுடன் 308 ரன்கள் குவித்திருந்தார். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. ஆனால், காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலக நேரிட்டதால், அவருக்குப் பதிலாக மாற்று தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.
ஐசிசியின் விதி என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைப்படி, ஒரு தொடரின் முடிவில், இறுதிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மட்டுமே வெற்றியாளருக்கான பதக்கங்கள் வழங்கப்படும்.
பிரதிகா ராவல், அரையிறுதிக்கு முன்பே காயம் காரணமாக அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மாற்று வீராங்கனை அறிவிக்கப்பட்டதால், அவர் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்ட முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தபோதிலும், இந்த விதிமுறையின் காரணமாக அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை.
இதே போன்ற ஒரு நிகழ்வு, 2003-ஆம் ஆண்டு ஆண்கள் உலகக்கோப்பையின் போதும் நிகழ்ந்துள்ளது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, நான்கு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகியதால் அவருக்கும் வெற்றியாளர் பதக்கம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீருடன் கொண்டாட்டம்:
ஞாயிற்றுக்கிழமை இரவு, டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டபோது, பிரதிகா ராவல் மைதானத்தின் ஓரத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அந்த வரலாற்றுத் தருணத்தைக் கண்டுகளித்தார். இந்தியக் கொடியைப் போர்த்தியபடி, அவரால் ஆனந்தக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"இதை எப்படி வெளிப்படுத்துவது என்று கூட எனக்குத் தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை. என் தோளில் இருக்கும் இந்தக் கொடிக்கு அவ்வளவு அர்த்தம் இருக்கிறது. என் அணியுடன் இங்கே இருப்பது ஒரு கனவு போல் உள்ளது. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதிதான், ஆனால் இந்த அணியுடன் என்னால் இருக்க முடிந்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் இதைச் சாதித்துவிட்டோம்! இந்தியாவே இந்த வெற்றிக்குத் தகுதியானது" என்று அவர் உணர்ச்சிப்பெருக்குடன் கூறினார்.
இறுதிப் போட்டியில் களமிறங்க முடியாதது அவருக்கு வலியைத் தந்தாலும், ஷஃபாலி வர்மாவின் ஒவ்வொரு பவுண்டரியையும், இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட்டையும் தனது சக வீராங்கனைகளைப் போலவே அதே ஆரவாரத்துடன் அவர் கொண்டாடினார். அவரது கழுத்தில் பதக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்தியா வென்ற முதல் மகளிர் உலகக்கோப்பையில் அவரது பங்களிப்பு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications