மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் லாரா முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், மழைக்கான லேசான வாய்ப்பு இருப்பதாலும் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டாஸ் வென்ற பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் கூறியதாவது:
"நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இங்கு மழை பெய்துள்ளது, மேலும் பின்னர் பனிப்பொழிவு இருக்கலாம். மழை காரணமாக ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும் என நம்புகிறோம். அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் நாங்கள் களமிறங்குகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு முன்னால் விளையாடும் இந்த வாய்ப்புக்காக நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம்." என்றார்.
டாஸ் இழந்த பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூறியதாவது: "வானிலையைப் பார்க்கும்போது நாங்களும் பந்துவீசவே விரும்பினோம். இருப்பினும், இப்போது நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து, ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முயற்சிப்போம். முதல் 5-6 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் சாதகம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் நாங்கள் செல்கிறோம். அரையிறுதிக்குப் பிறகு ஓய்வெடுக்க எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கிடைத்தது, அனைவரும் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்."
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கௌர், ராதா யாதவ், கிராந்தி கௌட், ஸ்ரீ சாரணி, ரேணுகா சிங் தாக்கூர்.
லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அனெக் போஷ், சுனே லூஸ், மரிசான் கேப், சினாலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), அனெரி டெர்க்சென், க்ளோ ட்ரையான், நடின் டி க்ளெர்க், அயபோங்கா காகா, நான்குலுலேகோ மிலாபா.
முன்னதாக இந்த இறுதிப்போட்டி, கனமழை காரணமாகத் திட்டமிட்ட நேரத்தில் துவங்கவில்லை. இந்தப் போட்டி இன்று மதியம் 3 மணிக்குத் துவங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த நேரத்தில் மைதானத்தில் கடுமையாக மழை பெய்ததால், போட்டியின் டாஸ் நேரம் மதியம் 2.30 மணியிலிருந்து 3 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது.
ஆனால், மாலை 3 மணி அளவில் மழை தொடர்ந்து பெய்ததால், டாஸ் போடப்படவில்லை. அதன் பின் 4 மணி அளவில் மழை நின்றதால் அம்பயர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் 4.32 மணிக்கு டாஸ் போடவும், 5 மணிக்கு போட்டியை துவங்கவும் முடிவு செய்தனர். அதன்படி 4.32 மணிக்கு டாஸ் போடப்பட்டது. அதில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. போட்டி துவங்கினாலும் மீண்டும் மழை வர வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிப் போட்டிக்கு 'ரிசர்வ் நாள்' (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவேளை இன்று போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க முடியாவிட்டாலோ அல்லது ஒரு பந்து கூட வீசப்படாவிட்டாலோ, நாளை (திங்கட்கிழமை) ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகள் என்ன என்பதை விரிவாகக் காண்போம்.
போட்டி நடுவர்களின் முதல் மற்றும் முக்கிய நோக்கம், திட்டமிடப்பட்ட நாளான இன்றே (ஞாயிற்றுக்கிழமை) போட்டியை நடத்தி முடிப்பதுதான். மழை காரணமாக ஆட்டம் தாமதமானால், ஓவர்கள் குறைக்கப்பட்டுப் போட்டி நடத்தப்படும். எவ்வளவு நேரம் இழக்கப்படுகிறதோ, அதற்கேற்ப ஓவர்கள் குறைக்கப்பட்டு, எப்படியாவது ஒரு முடிவை எட்டவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இறுதிப் போட்டிக்கு வழக்கமான போட்டிகளுக்கு அளிப்பதை விட கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினமே நள்ளிரவு வரை போட்டியை நடத்த முடியும்.
ஒரு ஒருநாள் போட்டியின் முடிவை (Result) அறிவிக்க வேண்டுமென்றால், இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 20 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில், இந்த 20 ஓவர் விதிமுறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதைவிடக் குறைவாக ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டால், போட்டி ரிசர்வ் டே-க்குச் செல்லும்.
இன்றைய தினம் போட்டியை நடத்தி முடிக்க 20 ஓவர் போட்டியாக இதை நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் போட்டி இரவு 9.08 மணிக்கு துவங்க வேண்டும். அதாவது, இன்றைய இரவு 9.08 மணிக்கில் இந்தப் போட்டியை 20 ஓவர்களாக நடத்தி இன்றைய தினமே இறுதிப் போட்டியை முடிக்கலாம்.
அப்படி 9.08 மணிக்குள் 20 ஓவர் போட்டியாக நடத்தும் முடிவை எடுக்க முடியவில்லை என்றாலோ, அந்த 20 ஓவர் போட்டியும் மழையால் தடைபட்டாலோ, கூடுதல் நேரத்தையும் சேர்த்து ஆட்டத்தை நடத்தவே முடியாத சூழல் ஏற்பட்டாலோ, கவலைப்படத் தேவையில்லை. இதற்காகவே 'ரிசர்வ் டே' (Reserve Day) எனப்படும் மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி நாளை (திங்கட்கிழமை) நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடரும். ஒருவேளை, இன்று ஆட்டம் தொடங்கவே இல்லை என்றால், நாளை முழுமையான 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும்.
ரிசர்வ் டேயான நாளையும் மழை விடாப்பிடியாகப் பெய்து, 20 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அந்தச் சூழலில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் "இணை சாம்பியன்கள்" (Joint Winners) ஆக அறிவிக்கப்பட்டு, உலகக்கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
இதற்கிடையே, 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றால், வீராங்கனைகளுக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.