IND vs SA: துண்டு ஒரு தடவ தான் தவறும்.. ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் சதம்.. மூன்று பிரிவிலும் செஞ்சுரி
விசாகப்பட்டினம்: தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் தனக்கென ஒரு பெயரை பெற்ற ஜெய்ஸ்வால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
டி20 போட்டிகளில் இதுவரை 23 போட்டியில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 723 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் விளையாடி 7 சதம், 13 அரை சதம் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.

இந்த சூழலில் ஜெய்ஸ்வால் தனது நான்காவது ஒருநாள் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் விளையாடினார். 271 ரன்கள் என்று இலக்கை இந்திய அணி துரத்தியபோது, அதனை பொறுப்பாக எதிர் கொண்டார். ஜெய்ஸ்வால், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகிறார் என்ற விமர்சனம் இருந்தது.
மேலும் ஸ்டெம்பிலிருந்து கொஞ்சம் நகர்ந்து வரும் பந்தை தேவையில்லாமல் பேட்டால் அறைகிறார். இதன் மூலம் அவர் ஆட்டம் இழந்து வருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். இதனால் இன்று ஜெய்ஸ்வால் முதலில் பொறுமை காத்தார். சுமார் 70 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் தான் 40 ரன்கள் கடந்தார்.
டெஸ்ட் போட்டியை போல் நெருக்கடி இல்லாமல் விளையாடிய ஜெய்ஸ்வால் பின்னர் அதிரடி காட்ட தொடங்கினார். பவுண்டரி சிக்ஸர்கள் என ஜெய்ஸ்வால் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினார். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று பிரிவிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்தது. இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா, ரோஹித், ராகுல், கோலி, கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications