கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி டை ஆனது. வெற்றி பெறாவிட்டாலும், வலுவான இந்திய அணிக்கு எதிரான டை செய்ததால் இலங்கை அணி உற்சாகம் அடைந்தது.
இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 75 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இந்திய அணி முதல் பாதி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட போதும், கடைசி நேரத்தில் சொதப்பியது. இதை அடுத்து இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்த நிலையிலும், கடைசி பத்து ஓவர்களில் 65 ரன்கள் குவித்தது. 200 ரன்களுக்குள் ஆட்டம் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது அந்த அணி.
அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சதிரா சமரவிக்ரமா 8 ரன்களிலும், சரித் அசலங்கா 14 ரன்களிலும், ஜனித் லியனாகே 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 34.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு 6 விக்கெடுகளை இழந்திருந்தது.
அந்த அணி 200 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 ஓவர் வரை முழுமையாக பேட்டிங் செய்தது இலங்கை. அதற்கு காரணம், அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன் டுனித் வெல்லாலகே தான். அவர் 65 பந்துகளில் 67 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வனிந்து அசரங்கா 24 ரன்கள் எடுத்தும், தனஞ்செயா 17 ரன்கள் எடுத்தும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். வெல்லாலகே இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இலங்கை பேட்ஸ்மேனாகவும் இருந்தார். இதை அடுத்து இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அபாரமான துவக்கம் அளித்தார். அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று ரன் குவிக்கவில்லை. இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை அடுத்து போட்டி டை ஆனது.