IND vs SL 1st T20: உலகக்கோப்பை வென்று கொடுத்த சிஎஸ்கே வீரருக்கே இந்திய அணியில் இடம் இல்லை?
கொழும்பு: 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபேவுக்கு இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதன் பின்னணியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு வரை இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்தார் ரிங்கு சிங். மிகக் குறைந்த போட்டிகளில் ஆடி இருந்தாலும், அவரது பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது. டி20 உலகக் கோப்பை க்கு முன்பு வரை ரிங்கு சிங்கின் சராசரி 89 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143 ஆக இருந்தது. ஆனால், உலக கோப்பையில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என கருதப்பட்ட சிவம் துபேவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சர்வதேச டி20 போட்டிகளில் சிவம் துபேவின் சராசரி 31 ஸ்ட்ரைக் ரேட் 137 மட்டுமே. அவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மட்டுமே அபாரமாக ஆடினார். சிவம் துபே இறுதிப் போட்டியில் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தார்.
எனினும், மற்ற போட்டிகளில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் உலகக் கோப்பைக்கு பின் ரிங்கு சிங் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்றார். அப்போது அவர் நான்கு இன்னிங்ஸ்களில் 60 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 176 ஆக இருந்தது. அதில் ஒரு முறை மட்டுமே அவர் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதை அடுத்து வேகப் பந்துவீச்சாளராவும் செயல்படக் கூடிய திறன் கொண்ட சிவம் துபே அல்லது சிறந்த ஃபினிஷராக இருக்கும் ரிங்கு சிங் ஆகிய இருவரில் யாரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும்? என்ற கேள்வி எழுந்தது.
சிவம் துபே ஆல் ரவுண்டராக இருந்தாலும் அவரை முந்தி ரிங்கு சிங்கிற்கே இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதற்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது ரிங்கு சிங் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது அவர் சரியாக ஆடாத போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க முக்கிய காரணமாக இருந்தார் கவுதம் கம்பீர். அதே போல இந்திய அணியிலும் சிறப்பாக ஆடி வரும் ரிங்கு சிங்கிற்கு கம்பீர் தொடர்ந்து ஆதரவு அளிப்பார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications