IND vs SL: முதல் டெஸ்டில் இந்தியா அபாரம்.. 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. இலங்கை சோகம்
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு, இது நாட்டின் 600-வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாகப் பந்துவீசி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஒட்டுமொத்தமாக இப்போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் பந்துவீச்சை பகிர்ந்து கொண்ட போதிலும், சுழலுக்குப் பெரிதாக சாதகமில்லாத காலி ஆடுகளத்தில் அவரது சிறப்பான செயல்பாடு இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 372 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, மானவ் சுதரின் சுழலில் சிக்கி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை அணி நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேப்டன் தனஞ்சய டி சில்வா 59 ரன்கள் மற்றும் சோனல் தினுஷா ஜோடி இணைந்து 95 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்திய வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கினர். இவர்களின் சிறப்பானபாப்ட்னர்ஷிப் ரவீந்திர ஜடேஜா முக்கிய தருணத்தில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தி உடைத்தார். இது போட்டியில் இந்தியாவிற்கு சாதகமான திருப்புமுனையாக அமைந்தது.
மற்றொருபுறம் சோனல் தினுஷா தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து 84 ரன்கள் எடுத்து மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிரோஷன் டிக்வெல்லா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின் கவனக்குறைவான ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேஷர நுவன்தாவின் விக்கெட்டை வீழ்த்தி மானவ் சுதர் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications
