SL vs IND: சாதனை படைத்த முகமது சிராஜ்.. ODI போட்டிகளில் இந்த சாதனையை செய்த 4வது இந்திய பவுலர்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்திருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று உள்ளன. முதல் போட்டியில் இரு அணிகளும் சரி சமமாக 230 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் இறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பதும் நிசங்கா கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் கே எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதன் மூலம், முகமது சிராஜ் இந்திய அளவில் ஒரு நாள் போட்டிகளில் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்தார். இதற்கு முன்பு மொஹான்டி, ஜாகிர் கான், பிரவீன் குமார் ஆகியோர் ஒருநாள் போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
இதில் ஜாகிர் கான் நான்கு முறை இந்த நிகழ்வை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்தது. முகமது சிராஜ் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அக்சர் பட்டேல் 1, குல்தீப் யாதவ் 2 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 9 ஓவர்களில் 58 ரன்களை வாரி இறைத்ததுடன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.


Click it and Unblock the Notifications