IND vs SL: விராட் கோலி, ரோகித் கூட செய்யல.. கேப்டனாக சுப்மன் கில் மாபெரும் சாதனை
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் புதிய வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றைப் பதிப்பில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2025-27 WTC சைக்கிளில் கேப்டனாக தனது 10-வது போட்டியில் விளையாடி வரும் சுப்மன் கில், இந்த மைல்கல்லை எட்ட இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 108 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது கேப்டனாக அவரது ரன் கணக்கு 1024 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கேப்டனாக அறிமுகமான கில், மிகக் குறுகிய காலத்தில் இச்சாதனையை எட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு கேப்டனும் ஒரு WTC தொடரில் 1000 ரன்களைக் கடந்ததில்லை. இதற்கு முன்னர் விராட் கோலி 2019-21 WTC தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 934 ரன்கள் எடுத்ததே இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
WTC 2025-27 சைக்கிளில் கேப்டனாக சுப்மன் கில்லின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் 4 சதங்களுடன் 75.40 சராசரியில் 754 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 269 ரன்களாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 192 ரன்கள் (சராசரி 96.00) எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 4 ரன்களும், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 74 ரன்களும் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கேப்டனாக விளையாடிய 10 போட்டிகளின் 17 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 68.26 சராசரியில் 1,024 ரன்களை அவர் குவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தற்போதைய தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 16 மற்றும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கில், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
WTC தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன்களின் பட்டியலில் சுப்மன் கில் தற்போது முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, 2019-21 வது ஆண்டின் WTC தொடரில் விராட் கோலி 15 போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 934 ரன்கள் (அதிகபட்சம் 254*) எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 2023-25 தொடரில் 17 போட்டிகளில் 864 ரன்களுடனும், விராட் கோலி 2021-23 தொடரில் 7 போட்டிகளில் 415 ரன்களுடனும், ரோஹித் சர்மா அதே 2021-23 தொடரில் 7 போட்டிகளில் 390 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உலகளவில் ஒரு WTC தொடரில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த ஐந்தாவது கேப்டன் சுப்மன் கில் ஆவார். இவருக்கு முன்னதாக ஜோ ரூட் (இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), திமுத் கருணாரத்ன (இலங்கை) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர். இதில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 2019-21 WTC சைக்கிளில் கேப்டனாக 1,660 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications

