SL vs IND: 27 ஆண்டு வரலாற்றில் படுதோல்வி அடைந்த இந்திய அணி.. இலங்கை சாதனை வெற்றி
கொழும்பு : இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2 - 0 என இழந்தது இந்திய அணி. 27 ஆண்டுகளில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழப்பது இதுவே முதல் முறை. அதிலும் பலவீனமான இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டை ஆனது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், முதல் இரண்டு போட்டிகளை விடவும் மூன்றாவது போட்டியில் மிக மோசமாக ஆடிய இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 45 ரன்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களும் குவித்தனர்.
அடுத்து வந்த குசால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்தார். அதன் பின்பு மிடில் ஆர்டரில் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். இறுதியில் கமிந்து மென்டிஸ் 23 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரியான் பராக் 9 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சிராஜ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். சிவம் துபே விக்கெட் வீழ்த்தாத போதும் நான்கு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அபாரமாக பந்து வீசி இருந்தார். இந்திய அணிக்கு 249 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. கொழும்பு மைதானத்தில் இது சவாலான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சேஸிங்கில் மோசமாக சொதப்பியது. ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஸ்ரேயாஸ் 8, அக்சர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 ரன்கள் என வரிசையாக சொற்ப ரன்களில் விக்கெட்களை இழந்தனர்.
வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் போராடினார் அவர் 30 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 110 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை சந்தித்தது.
Story first published: Wednesday, August 7, 2024, 20:35 [IST]
Other articles published on Aug 7, 2024


Click it and Unblock the Notifications