சூர்யகுமார் அபார பவுலிங்.. கடைசி ஓவரில் 2 விக்கெட்டு.. டை-ஆன போட்டி.. சூப்பர் ஓவரில் வென்றது யார்?
பாலக்கல்லே : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சமனில் முடிவடைந்ததால் வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. மழை பெய்ததால் போட்டி கொஞ்சம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய ஜெய்ஷ்வால் 10 ரன்களும், சஞ்சு சாம்சன் ஒரு ரன்னும், எடுக்க இந்திய அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்களில் வெளியேற, சிவம் துபே 13 ரன்கள் தான் எடுத்தார்.

இதனை அடுத்து ரியான் பராக், கில் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்க போராடினர். 37 பந்துகளை எதிர் கொண்ட கில் 39 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரியான் பராக் 26 ரன்களும், இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
இதன் அடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இலங்கை அணியின் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அபாரமாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்தது. 43 ரன்கள் எடுத்த குசல் மெண்டிஸ் ஆட்டமிக்க, குசேல் பெரேரா 46 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 117 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.
19 ஆவது ஓவரை ரிங்கு சிங் வீசினார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் இரண்டாவது பந்திலும் ஆறாவது பந்திலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இதன் அடுத்து கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது சூரிய குமார் தான் பந்து வீசுகிறேன் என்று பொறுப்பை எடுத்துக்கொண்டு இரண்டாவது பந்திலே விக்கெட்டை வீழ்த்தினார். யாருமே எதிர்பாராத வகையில், அடுத்த பந்திலும் விக்கெட் விழ, அவருக்கு ஹார்ட்ரிக் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட இலங்கை அணி இரண்டு ரன்கள் ஓடியே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிவடைந்தது. இதன் அடுத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சூப்பர் ஓவர் வீச மூன்றாவது பந்து மற்றும் நான்காவது பந்தில் தொடர்ந்து இரண்டு விக்கெட் அவர் வீழ்த்தினார். இதனால் சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து சூர்யகுமார் களமிறங்கி முதல் பந்திலே பவுண்டரி அடித்தார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது. கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்ற முதல் தொடரிலே இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications