மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இருந்தார் சுப்மன் கில். அவரது தலைமையில் இந்திய அணி 4 - 1 என்ற கணக்கில் அந்த டி20 தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி என்றால் என்ன என்றே தெரியாது என சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா அதிரடியாக விமர்சனம் செய்து இருக்கிறார். அதே சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை சிறந்த கேப்டன் என கூறி இருக்கிறார்.
சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்ததே தவறு, ஐபிஎல் தொடரில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் எனவும் அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமித் மிஸ்ரா மனம் திறந்து பல்வேறு விஷயங்களை பேசி சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார். விராட் கோலி பதவி மற்றும் புகழ் வந்தவுடன் மாறி விட்டார் எனவும் பேசி இருந்தார்.

அதை அடுத்து சுப்மன் கில்லை பற்றியும் மிக வெளிப்படையாக விமர்சித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து கேட்கப்பட்டது. அப்போது அமித் மிஸ்ரா பேசுகையில், "அவரை கேப்டனாகவே ஆக்கி இருக்கக் கூடாது. நான் அவரை ஐபிஎல் தொடரில் பார்த்து இருக்கிறேன். அவருக்கு ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரியவில்லை."
"அவருக்கு கேப்டன்சி என்றால் என்ன என்றே தெரியவில்லை. அவர் இதற்கு முன் அதிகமாக கேப்டனாக செயல்பட்டது இல்லை. அப்புறம் ஏன் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்? அந்த முடிவை யார் எடுத்தார்களோ அவர்களை தான் நீங்கள் கேட்க வேண்டும். யார் ஒருவர் அணிக்காக சிறப்பாக சிந்திக்கிறாரோ அவரைத் தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். எவர் அணிக்காக விளையடுகிறாரோ, சிறப்பாக செயல்படுகிறாரோ, அவரே கேப்டனாக இருக்க வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் அவரை விட 100 சதவீதம் சிறந்த கேப்டன். " இவ்வாறு அமித் மிஸ்ரா பேசி இருக்கிறார்.
சுப்மன் கில் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் வெற்றிகரமான அணியாக இருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 2022-ல் கோப்பையையும் வென்று இருந்தது.
ஆனால், சுப்மன் கில் கேப்டன்சியில் அந்த அணி 2024 ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது. 14 போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது குஜராத் டைட்டன்ஸ். அதை சுட்டிக் காட்டித் தான் சுப்மன் கில் கேப்டன்சி குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அமித் மிஸ்ரா.