சென்னை: டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் பயிற்சியாளர் குழுவில் இருந்த விக்ரம் ரத்தோர், பராஸ் ஆம்ரே உள்ளிட்டோரின் ஒப்பந்தமும் முடிவடைந்த நிலையில், அடுத்தக் கட்டமாக அபிஷேக் நாயர், மோர்னே மோர்க்கல் உள்ளிட்டோர் பொறுப்புக்கு வரவுள்ளனர்.
ஆனால் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மட்டும் அவரது பொறுப்பில் தொடரவுள்ளார். இந்த நிலையில் இந்திய ஏ அணியின் பயிற்சியாளரும், என்சிஏ தலைவருமான விவிஎஸ் லக்ஷ்மணனின் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அடுத்த என்சிஏ தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் எதிர்காலம் எப்போதும் என்சிஏ-வில் தான் உருவாகும்.

அந்த வகையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் ஜெய் ஷா, விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதில் விவிஎஸ் லக்ஷ்மணிடம், என்சிஏ தலைவருக்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று ஜெய் ஷா தெளிவாக கூறிவிட்டதாக தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற போது, என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண் கொண்டு வரப்பட்டார்.
இதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எப்போதெல்லாம் ஓய்வில் இருக்கிறாரோ, அப்போது விவிஎஸ் லக்ஷ்மண் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அண்மையில் ஜிம்பாப்வே டி20 தொடரில் கூட இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்பட்டார். இந்த நிலையில் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பின் அடுத்த என்சிஏ தலைவராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
தற்போது அந்த கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த என்சிஏ தலைவராக விக்ரம் ரத்தோர் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐசிசி ஆலோசனை கூட்டம் முடிவடைந்து ஜெய் ஷா வந்த பின், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
55 வயதாகும் விக்ரம் ரத்தோர், 2019ஆம் ஆண்டு பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார். ரவி சாஸ்திரி பதவிக் காலத்தில் பொறுப்புக்கு வந்தாலும், ராகுல் டிராவிட்டின் சிறந்த நண்பர் என்பதால், அதே பொறுப்பில் தொடர்ந்து வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வந்த அவர், என்சிஏ தலைவராக பொறுப்பேற்க உள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.