துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, இந்திய அணி தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் ஆடின. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. வங்கதேச அணி ஒரு வெற்றி மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு மட்டுமே கடைசிப் போட்டி மீதமுள்ளது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் அதிகபட்சம் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதை வைத்து இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.
எனவே, இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், ஏற்கனவே நான்கு புள்ளிகள் எடுத்து இருப்பதால் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதேபோல, பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. எனவே, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது.
ஒருவேளை இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தினால், அது இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாக அமையும். அதே சமயம், இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன் மனதளவில் ஒருவித சோர்வை ஏற்படுத்தும். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்குச் சென்றால், அது நிச்சயம் இந்திய வீரர்களுக்குப் பதற்றத்தை அதிகரிக்கும்.
எனவே, இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும், இந்திய வீரர்கள் இலங்கை அணிக்கு எதிராகக் கவனமாக விளையாடி, வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியால் முழு தன்னம்பிக்கையுடன் களமிறங்க முடியும்.