IND vs SL: என்னுடைய கனவு, ஆசை நிறைவேறிவிட்டது.. இரவு படுத்து தூங்கி விடுவேன்- தேவ்தத் படிக்கல்
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை விளாசினார். இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 460/9 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. காயம் காரணமாக விலகிய தமிழக வீரர் சாய் சுதர்சனுக்குப் பதிலாக படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார்.
தனது முதல் டெஸ்ட் சதத்தைக் கொண்டாடுவதற்கு தேவ்தத் படிக்கல் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. காலே மைதானத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், அவர் 230 பந்துகளில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இது போன்ற சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் கொண்டாடும் வழக்கம் உள்ளதா என்று கேட்டதற்கு, "அப்படியெல்லாம் இல்லை. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், அதனால் இப்போது நேராக அறைக்குச் சென்று தூங்கப் போகிறேன்," என்று படிக்கல் பதிலளித்தார்.
"இந்தத் தருணத்திற்காக நான் நீண்ட நாட்களாகக் கனவு கண்டேன்," என்று தனது முதல் சதம் குறித்துப் பேசிய படிக்கல் கூறினார். "கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான உழைப்பை மேற்கொண்டு வந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இது போன்ற சிறப்பான ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், அதைச் செய்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்று அவர் கூறினார்.
"குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது மனதில் சில திட்டங்களை வைத்திருப்பது மிகவும் அவசியம், மைதானத்திற்குச் சென்று எப்போதும் பந்துக்கு தகுந்தவாறு எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்க முடியாது. களம் இறங்கிய உடனே எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதில் தெளிவான யோசனை இருக்க வேண்டும், அப்போதுதான் பந்துவீச்சாளர் மீது அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். கடந்த ஓராண்டாக, எங்கள் பலத்திற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை கண்டறிய நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்," என்று அவர் தேவ்தத் படிக்கல் கூறினார்.


Click it and Unblock the Notifications

