IND vs SL: மனசாட்சி இருக்கா.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்-க்கு நடந்த சோகம்.. பாரபட்சம் காட்டும் பிசிசிஐ
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லுக்கு சாதகமாக பிசிசிஐ நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரைசதம் உட்பட 133 ரன்களை விளாசினார். இதன் காரணமாக ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நம்பர் 7 இடத்திற்கு முன்னேறினார். தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட், மிடில் ஆர்டரில் களமிறங்கி அபாரமாக விளையாடி அசத்தினார்.

இதனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 அல்லது ஒருநாள் தொடரில் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில்லின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஏனென்றால் 5 போட்டிகளில் விளையாடி 170 ரன்கள் சேர்த்தாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 120ஆக மட்டுமே இருந்தது.
இதனால் டி20 கிரிக்கெட் அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யக் கூடாது என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வந்தனர். இந்த நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.
இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத்தை மனதில் வைத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் அணியில் கூட சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் இரு அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பிசிசிஐ திறமைக்கு பதிலாக ஸ்டார் வீரர்களையே தேர்வு செய்வதில் முனைப்பு காட்டுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications