IND vs SL முதல் டெஸ்ட்டில் இந்தியா ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? 2 நாளும் மழை.. வியூகம் இதுதான்
காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ளன. அந்த இரண்டு நாட்களிலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எஞ்சிய நாட்களில் 100 முதல் 130 ஓவர்கள் மட்டுமே வீசப்பட வாய்ப்புள்ளது. இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் இந்திய அணி எவ்வாறு வெற்றி பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களும், இலங்கை அணி 284 ரன்களும் எடுத்தன. இதன் மூலம் இந்திய அணி 178 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது. தற்போது 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில், இரண்டாவது இன்னிங்ஸில் மிக வேகமாக ரன் குவிக்க வேண்டும்.

அதாவது, 40 முதல் 45 ஓவர்களுக்குள் இந்திய அணி 200 ரன்களைக் குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இலங்கைக்கு 370 ரன்களுக்கு மேல் கடினமான இலக்கை நிர்ணயிக்க முடியும். மழை குறுக்கீடுகளுக்கு இடையே, இலங்கை அணிக்கு இந்த இலக்கை எட்ட 50 முதல் 80 ஓவர்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஓவர்களுக்குள் இலங்கை அணியால் 370 ரன்களை எட்ட முடியாது. அதே சமயம், இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த 50 முதல் 80 ஓவர்களுக்குள் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியைத் தேடித்தர தீவிரமாக முயல வேண்டும்.
இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில், இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக மாறியுள்ளது. தங்களுக்கு மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 7 வெற்றிகளைப் பெற வேண்டும். எனவே, காலே டெஸ்டில் வெற்றியைப் பெற கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஜோடி அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
