இவ்வளவு திமிர் கூடாது.. அடிவாங்கியும் திருந்தாத கம்பீர்.. இந்தியாவின் தோல்விக்கு காரணமே அதுதான்!
கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்களை குவித்தது.
அதன்பின் ரோஹித் சர்மா 64 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த வீரர்களில் அக்சர் படேலை தவிர்த்து அனைவரும் கண்மூடி திறப்பதற்குள் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இறுதியாக 42.2 ஓவர்களில் இந்திய அணி 208 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக வாண்டர்சே 6 விக்கெட்டுகளையும், கேப்டன் அசலங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணி இந்திய அணியை டிஃபெண்ட் செய்து வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிடில் ஆர்டரில் செய்த மாற்றங்களே காரணமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் நம்பர் 4 வீரராக இடதுகை பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும் என்பதில் கவுதம் கம்பீர் தீவிரமாக உள்ளார். ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை களமிறக்கி சொதப்பிய நிலையில், 2வது போட்டியில் சிவம் துபேவை களமிறக்கினார். அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற, மீண்டும் அக்சர் படேலை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். நேரம் செல்ல செல்ல பிட்சில் எக்குதப்பாக ஸ்பின் அதிகமாகி கொண்டே போனது. இதனால் பேட்ஸ்மேன்களை முன்பே களமிறக்கி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வைத்திருக்க வேண்டும்.
ஆனால் கம்பீர் இடது - வலது கூட்டணியில் கவனத்தை வைத்துவிட்டு, பிட்ச் மற்றும் ஸ்பின்னை கணிப்பதில் கோட்டைவிட்டுள்ளார். இதனால் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஸ்பின்னை கணிக்க முடியாமல் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு கம்பீரின் பரிசோதனை முயற்சிகளே காரணமாக அமைந்துள்ளது. இதனால் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications