துபாய் : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 90 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ரன் ரேட்டும் பாசிட்டிவ் ஆக மாறி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த உத்வேகம் தொடர வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷிப்பாலி மற்றும் ஸ்மிருதி ஆகியோர் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு அளித்தார்கள்.
பாராட்டுக்கள் அனைத்தும் அவர்களுக்கு சேர வேண்டும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. ஒவ்வொரு ஷாட்டையும் கணக்கிட்டு விளையாட வேண்டிய சூழலில் இருந்தார்கள். இதன் மூலம் தொடக்கத்தில் அவர்கள் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்படுத்திய நல்ல அடிதளம் எங்களுக்கு உதவியது.
இதனை தொடர்ந்து நானும் ஜெமிமாவும் ஒரு ஓவருக்கு ஏழு அல்லது எட்டு ரன் அடித்தால் போதும் என்று நினைத்தோம். இன்று எனது நாளாக அமைந்தது. எனக்கு ஏற்ற வகையில் பந்து வீசப்படும் போது அதை அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். எனவே பந்து எனக்கு சாதகமான இடத்தில் பவுலர்களால் வீசப்படும் போதெல்லாம் நான் அதிரடியாக விளையாடினேன்
இன்று மொத்தமாகவே நான் பாசிட்டிவ் ஆக தான் இருந்தேன். ஆனால் இன்றைய ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் சிங்கிள்ஸ் எடுத்து ரன்களை சேர்த்தோம். பந்து எப்போது நமக்கு சாதகமான இடத்தில் வந்தால் மட்டுமே அடித்து ரன்கள் சேர்க்க முடியும். ஆனால் பேட்டர்கள் பேட்டை சுழற்றி சுழற்றி ரன்கள் எடுப்பது போல் உங்களுக்கு தெரியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
விக்கெட்டுகளை வீணடிக்காமல் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதெல்லாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோமோ, அப்போதெல்லாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நாங்கள் பேட்டிங் பில்டிங் பந்துவீச்சு என அனைத்தையுமே சிறப்பாக செயல்பட்டோம். முக்கியமான கேட்சுக்களையும் பிடித்தோம். போட்டிக்கு முன்பு நாங்கள் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம்.
ரன் ரேட் மிகவும் முக்கியம் என்ற சூழலில் நாங்கள் இருக்கின்றோம். எனவே ரன் ரேட் குறித்தும் யோசித்து தான் ஆக வேண்டும்.ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி கிடைக்கும். எங்களுடைய பவுலர்கள் தற்போது நல்ல முறையில் பந்து வீசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார்.