பாலக்கலே: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முழு நேரக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்ற முதல் டி20 தொடரிலேயே சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வென்று காட்டியுள்ளார்.
இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணியில் சில வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை கொடுத்து தயார் செய்வதில் கவுதம் கம்பீர் தீவிரமாக உள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்கு தரமான இடதுகை பவுலரை கம்பீர் தேடி வருகிறார்.

அர்ஷ்தீப் சிங் ஏற்கனவே இந்திய அணியில் இருந்தாலும், 140க்கும் அதிகமான வேகத்தில் வீசக் கூடிய ஒரு பவுலர் இந்திய அணிக்கு தேவையாக உள்ளார். இதற்காகவே இளம் வீரர் கலீல் அஹ்மத் தொடர்ச்சியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதனால் 3வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கலீல் அஹ்மத் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜடேஜாவின் இடத்தை ஏற்கனவே அக்சர் படேல் பிடித்துவிட்ட நிலையில், அவருக்கான பேக் அப் வீரரை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் தொடர்ச்சியாக தேர்வு செய்து வருகின்றனர். ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்ற போது, இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் கடைசி போட்டியில் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதுகு பிடிப்பு காரணமாக 2வது டி20 போட்டியில் ஓய்வில் இருந்த சுப்மன் கில் நிச்சயம் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஒருநாள் தொடருக்கு தேர்வாகியுள்ளதால், ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, 2வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.