IND vs SL: 6.3 ஓவர்களில் சோலி முடிஞ்ச்.. டி20 தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை.. சூர்யகுமார் சம்பவம்!
பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. மழை காரணமாக டிஎஸ்எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 78 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 6.3 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றியை பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. மழைக் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா - குசால் மெண்டிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் சேர்த்து அதிரடியாக தொடங்கினர். இதன்பின் நிதானமாக ஆடிய நிலையில், குசால் மெண்டிஸ் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிசாங்கா - குசால் பெரேரா கூட்டணி இணைந்து இலங்கை அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் இலங்கை அணியின் ஸ்கோர் 54 ரன்களாக உயர்ந்தது.
அதன்பின் ஸ்பின்னர்களை பயன்படுத்தி இருவரும் ஏராளமான பவுண்டரிகளை விளாசி அசத்தினர். சிறப்பாக ஆடிய நிசாங்கா 32 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கமிண்டு மெண்டிஸ் அபாரமாக பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக ஆடிய குசால் பெரேரா சிக்சர் அடித்து 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய 16வது ஓவரில் கமிண்டு மெண்டிஸ் 26 ரன்களிலும், பெரேரா 34 பந்துகளில் 53 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ரவி பிஷ்னாய் வீசிய 17வது ஓவரில் ஷனகா மற்றும் ஹசரங்கா இருவரும் அடுத்தடுத்து போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா களம் புகுந்தார். ஆனால் அவரும் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று 14 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தீக்சனாவும் 2 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதன்பின் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தொடங்கினர். ஆனால் 3வது பந்திற்கு பின் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டதால், இந்திய அணிக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் பவர் பிளே 2 ஓவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 6.3 ஓவர்களில் சேஸிங் செய்து அசத்தியது. இதன் மூலமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல் கம்பீர் - சூர்யகுமார் யாதவ் இருவரும் முதல் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications