கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ரயன் டென் டோஷேட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முந்தைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அவருடன் இருந்த பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் 2024 டி20 உலகக் கோப்பையுடன் விடை பெற்றனர். ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மீண்டும் தனது ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொண்டுள்ளார்.
தற்போது இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கம்பீர் தனக்கு இரண்டு துணைப் பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பவுலிங் பயிற்சியாளர் வேண்டும் என கேட்டு பெற்று இருக்கிறார். அதில் ஒரு துணைப் பயிற்சியாளர் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் ஆவார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். இளம் வீரர்களை பட்டை தீட்டுவதில் அவர் சிறந்து விளங்கியதால் பிசிசிஐ அவரை துணை பயிற்சியாளராக நியமிக்க ஒப்புக்கொண்டது.

ஆனால், வெளிநாட்டு பயிற்சியாளரான ரயன் டென் எப்படி இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதற்கு முன்பு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இந்திய அணி சின்னாபின்னமானது. வீரர்களிடையே விரிசல் எழுந்தது.
அதன் பின்னர் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் யாரையும் நியமிப்பதில்லை என பிசிசிஐ முடிவு செய்தது. அணி நிர்வாகம் சாராத உதவியாளர்களாக மட்டுமே வெளிநாட்டை சேர்ந்த ஒன்று, இரண்டு பேர் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக ரயன் டென் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு முழு முதல் காரணம் கவுதம் கம்பீர் மட்டுமே. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணியில் ஒரு வீரராக இடம்பெற்று இருந்தார் ரயன் டென் டோஷேட். அவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர். கத்துக்குட்டி அணியான நெதர்லாந்தை சேர்ந்த அவர் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.
கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் மற்றும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை பார்த்து வியந்த கவுதம் கம்பீர் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைத்தார். தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆகியிருக்கும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ரயன் டென்-ஐயும் இழுத்து வந்து இந்திய அணியின் துணை பயிற்சியாளராக ஆகி இருக்கிறார்.
கவுதம் கம்பீர் உடைய கட்டுப்பாட்டு மீறி ரயன் டென் எதையும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ அவரை துணை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. எனினும், கவுதம் கம்பீர் செய்தது விபரீதமான முடிவு என சில ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய அணிக்கு எந்த வகையிலும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை என்பது அவர்களது கருத்தாக உள்ளது.