IND vs SL: நீயெல்லாம் மனுசனே இல்லை.. தான் அவுட் ஆனதாக நினைத்து அம்பயரையே நம்ப வைத்த இலங்கை வீரர்
கொழும்பு: இலங்கை அணி வீரர் ஜனித் லியனாகே இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தான் அவுட் ஆகாத போதும் அவுட் என நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதனால், அம்பையர் குழம்பிப் போய் அவருக்கு அவுட் கொடுத்தார். சில நிமிடங்களுக்கு பின் ரீப்ளேவில் என்ன நடந்தது என்பதை பார்த்த இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் நடந்ததை நினைத்து சிரித்தனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா நிலையாக ஆடி 56 ரன்கள் சேர்த்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர்.

ஆறாம் வரிசையில் இறங்கிய ஜனித் லியனாகே 20 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததாக எண்ணி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். உண்மையில் என்ன நடந்தது என்றால் அக்சர் பட்டேல் வீசிய பந்தை லியனாகே அடிக்க முயன்றார். அப்போது அவரது பேட் தரையில் உரசியது.
அதனால் பந்து பேட்டில் பட்டது போல ஒரு சத்தம் கேட்டது. பந்தை ரோஹித் சர்மா கேட்ச் பிடித்தார். அதனால், இந்திய அணி வீரர்கள் இது அவுட் என நினைத்து அம்பயரிடம் அவுட் கேட்டனர். ஆனால், பந்து பேட்டில் படவில்லை என்பதை அறிந்த அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். அப்போது லியனாகே தான் அவுட் தான் என நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அம்பயர் அவுட் தர இல்லை என்பதை கூட கவனிக்காமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
பேட்ஸ்மேன் தானே அவுட் என ஒப்புக் கொண்டதை அடுத்து அம்பயர் தனது முடிவை உடனடியாக மாற்றி அவுட் என அறிவித்தார். விக்கெட் வீழ்த்தியதை எண்ணி இந்திய வீரர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்து பெரிய திரையில் ரீப்ளே காட்டப்பட்டது.
அதில் லியனாகே பேட்டில் வந்து படவில்லை என்பது தெளிவானது. இதை அடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் லியனாகே தாமாக விக்கெட்டை பரிசளித்ததை நினைத்து சிரித்தனர். பின்னர் இந்த போட்டியில் இலங்கை அணி 230 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அனைத்து ஆல் அவுட் ஆனது. அதனால், இந்த போட்டி டை-யில் முடிந்தது.


Click it and Unblock the Notifications