சென்னை: டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் தனக்கான பயிற்சியாளர்கள் குழுவை ஒருங்கிணைக்க பிசிசிஐ தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பின் தன்னுடன் கேகேஆர் அணியில் பணியாற்றிய அபிஷேக் நாயரை துணைப் பயிற்சியாளராகவும், ரியான் டென் டஸ்காட்டே துணைப் பயிற்சியாளராகவும், பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கலையும் பரிந்துரை செய்தார்.

அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி திலீப், இந்திய அணியுடன் மீண்டும் பயணிக்கவுள்ளார். இவர்களின் முதல் தொடர்பாக இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் இருக்கும் என்று பார்க்கப்பட்டது. இவர்களின் நியமனம் குறித்து பிசிசிஐ நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீரென தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்க்கல் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் பயணிக்க முடியாது என்று கூறியுள்ளது தெரிய வந்துள்ளது. சொந்த காரணங்களால் விலகுவதாகவும், இலங்கை தொடருக்கு பின் இந்திய அணியுடன் இணைந்து கொள்வதாகவும் மோர்க்கல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணியின் இடைக்கால பவுலிங் பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே பயணிப்பார் என்று தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், விவிஎஸ் லக்ஷ்மணுக்கு கீழ் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியுடன் பயணித்தார். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் இவரின் அனுபவம் இந்திய அணி பவுலர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மோர்க்கலின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்கா பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பிசிசிஐ தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கூறப்படவில்லை. சொந்த விஷயங்களை முடித்துவிட்டு அடுத்த சர்வதேச தொடருக்கு இந்திய அணியுடன் இணைந்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.