கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கடைசி வாய்ப்பை வழங்கி இருக்கிறது இந்திய அணி.
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் ஆபத்தில் இருந்து தப்பித்தது.

பாகிஸ்தான் அணி அடுத்து ஆட உள்ள போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளும் குரூப் சுற்றில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 4 சுற்றில் இதுவரை நடந்த போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகள் பெற்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இரண்டும் வங்கதேச அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் அடிப்படையில் 2 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. இலங்கை நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தற்போது சூப்பர் 4 சுற்றில் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற இலங்கை அணியை வீழ்த்தினாலே போதும். அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 213 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அப்போது இந்திய அணி தோல்வி அடையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை 172 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிதான் பாகிஸ்தானுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கடைசி வாய்ப்பை வழங்கி உள்ளது என இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வியாழன் அன்று நடைபெற உள்ளது. இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. வங்கதேச அணி, இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும் கூட இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, இலங்கை - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும். அப்போது இரண்டு அணிகளும் 3 புள்ளிகளுடன் இருக்கும். அந்த நிலையில், நெட் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.