அடேங்கப்பா..!! பேய் அடி அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. கௌரவமான இலக்கை எட்டிய இந்தியா
பெங்களூரு : இலங்கைக்கு எதிரான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்தியா 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
மேலும் பிங்க் நிற பந்தும், சரியாக பவுன்ஸ் ஆகவில்லை. இதனால் இந்திய வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

தடுமாற்றம்
மாயங் அகர்வால் 4 ரன்களில் மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா முதல் சில ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்ததும் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. பந்து நன்றாக திரும்பியதால், பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பாதுகாக்கவே திணறினர்.

விராட் கோலி அவுட்
ரோகித் சர்மா 15 ரன்களில் எம்புல்தேனியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிதானமாக விளையாடிய ஹனுமா விஹாரி 81 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை சேர்த்து வெளியேறினார். இதனையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 23 ரன்களில் எல்பி டபிள்யூ ஆனார். பந்து சரியாக பவுன்ஸ் ஆகாததால் விராட் கோலி, அதனை தவறவிட, அது நேராக காலில் பட்டது.

இந்தியா தடுமாற்றம்
களத்துக்கு வந்த ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசினார். 26 பந்துகளில் அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது எம்புல்தேனியா வீசிய பந்து, ரிஷப் பந்தின் ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் இந்திய அணி 126 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயாஸ் அதிரடி
ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தினார். 4 இமாலய சிக்சர்கள், 10 பவுண்டரிகளை விளாசிய அவர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இலங்கை வீரர்கள் எம்புல்தேனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.


Click it and Unblock the Notifications
