IND vs SL: இந்திய கேப்டன் செய்த செயல்.. தவித்துப் போன இலங்கை.. வெற்றிக்கு காரணமே இதுதான்
பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெறுவது போன்ற சூழ்நிலை இருந்தது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி எப்படி கடைசி 5 ஓவர்களில் பதற்றமடையாமல் இருந்து வென்றதோ, அதே போல இந்தப் போட்டியிலும் செய்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்களும், ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களும் குவித்தனர். அடுத்து 214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா மற்றும் குசால் மென்டிஸ் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த குசால் பெரேராவும் அதிரடியாக ஆடினார். நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை அணி. கடைசி ஆறு ஓவர்களில் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. மேலும், 9 விக்கெட் கையில் இருந்தது. அதனால், இலங்கை அணியே வெற்றி பெறும் என அனைவரும் எண்ணினர்.
ஆனால், அப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்த வகையிலும் பதற்றம் அடையாமல் அமைதியாக இருந்தார். 15 வது ஓவரை அக்சர் பட்டேல் வசம் அளித்தார். கேப்டனை போலவே மற்ற வீரர்களும் பதற்றம் அடையாமல் அமைதியாக இருந்தனர். இதை அடுத்து 15வது ஓவரில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் பதும் நிசங்கா 79 ரன்கள் அடித்த நிலையிலும், குஷால் பெரேரா 20 ரன்கள் அடித்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.
அந்த ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்தாலும் இலங்கை அணி தொடர்ந்து ரன் குவித்தது. அதே சமயம், இந்திய அணியும் அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ந்து விக்கெட் வேட்டையாடியது. யாரும் எதிர்பாராத விதமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 17வது ஓவரை ரியான் பராக்கிடம் அளித்தார். பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான அவர் இந்த போட்டியில் முதன்முறையாக 17வது ஓவரில் தான் பந்து வீசினார். இந்த முடிவு சரியானதா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால், அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் மற்றும் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. இதை அடுத்து இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 163 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. 19 வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
கடைசி ஓவரை வீசிய ரியான் பராக் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 31 ரன்கள் எடுப்பதற்குள் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து இருந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதற்றம் அடையாமல் இருந்ததோடு, மற்ற வீரர்களையும் அமைதியான மனநிலையில் வைத்துக் கொண்டதன் காரணமாகவே இந்த போட்டியில் கடைசி ஆறு ஓவர்களில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பதற்றம் அடையாமல் இருந்ததால் எந்த தவறையும் செய்யாமல் விக்கெட் வேட்டையாடி வெற்றி பெற உதவினர்.


Click it and Unblock the Notifications