மும்பை : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிக்கு இலங்கை மிகவும் அருகாமையில் இருந்ததையும் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடைசி இரண்டு ஓவரை ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ் வீசியது ஆட்டத்தில் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதப்பட்டது.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தான் கடைசி ஓவர் வீசப் போகிறார் என்று தங்களுக்கு தெரியாது என்று இந்தியாவின் இளம் வீரர் ரியான் பராக் கூறினார். போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய அவர், நாங்கள் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் தீட்டவில்லை. அனைத்தையும் சிம்பிளாக வைத்துக்கொள்ள தான் முயற்சி செய்தோம்.

பந்து நன்றாக திரும்புகிறது என்றால் சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த நினைப்பில் கவனத்தை இழந்து விடுவார்கள்.ஆனால் இந்த சூழலிலும் சரியான இடத்தில் பந்து வீசினால் மட்டுமே பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்க முடியும். ரிங்கு சிங் சூரியகுமாரியாவும் இருவருமே அபாரமாக பந்து வீசினார்கள்.
நாங்கள் அனைவருமே தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசி பயிற்சி செய்பவர்கள். நாங்கள் வலை பயிற்சியிலும் தீவிரமாக பந்து வீசிக்கொண்டு தான் இருந்தோம்.இன்னும் சொல்லப்போனால் ஆட்டத்தின் இறுதியில் எங்களுக்கு பதற்றமே இல்லை. நாங்கள் ஜாலியாக தான் இருந்தோம். நான் கடைசி ஓவரை சிராஜ் தான் வீசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று சூரியகுமார் தாமே பந்து வீசுகிறேன் என்று கூறிவிட்டார்.
ஒரே நேரத்தில் ஜாலியாகவும் அதே சமயம் வெற்றி வேண்டும் என்ற உத்வேகத்தனுடம் செயல்பட்டோம் என்று ரியான் பராக் கூறினார்.இதனிடையே ரிங்கு சிங் விக்கெட் எடுத்தவுடன் கம்பீர் விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. கம்பீரையே இலங்கை அணி சிரிக்க வைத்ததால், இலங்கை அணிக்கு தான் கோப்பையை வழங்க வேண்டும் என நம் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.