IND vs SL: நானே சொல்லித் தரேன்.. ரோஹித் சர்மா செய்த செயல்.. நெகிழ்ந்து போன ஸ்ரேயாஸ் ஐயர்
கொழும்பு: சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி இருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற புகார் எழுந்தது. அதனால், அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
அந்த கசப்பான சம்பவத்திற்கு பின் ஸ்ரேயாஸ் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் இணைந்து இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் கேப்டன் ரோஹித் சர்மாவின் கீழ் ஆட இருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், அவருக்குமான உறவில் விரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறான சம்பவம் நடந்தது.

இலங்கை ஒருநாள் தொடருக்கு முன் நடந்த வலைப் பயிற்சியில் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பலவீனத்தை உடைக்க சில ஆலோசனைகளை வழங்கி, முன் நின்று பயிற்சி அளித்தார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் புல் ஷாட் ஆடுவதில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கு முன்பும் அதே பிரச்சனையுடன் அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவர் தனது பலவீனத்தை சரி செய்து கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவரை அணியிலிருந்து நீக்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
அப்போது பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு அறிவுறுத்தினார். ஆனால், தனக்கு முதுகில் லேசான வலி இருப்பதால் ஓய்வில் இருக்கப் போவதாக அவர் கூறினார். பிசிசிஐ அதை ஏற்க மறுத்தது. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருக்கவே, முதுகு வலி இருப்பதாக சொல்கிறார் என அதிருப்தி அடைந்து அவரது ஒப்பந்தத்தையும் நீட்டிக்க மறுத்தது.
இதனிடையே அவர் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அந்த அணிக்கு கோப்பையும் வென்று கொடுத்தார். அதன் பின் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு உண்மையாகவே முதுகு வலி இருந்தது என்றும், ஆனால் பிசிசிஐ-யில் யாரும் அதை ஏற்கவில்லை எனவும் அவர் உண்மையை போட்டு உடைத்து இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் இணைந்து இருக்கிறார். வலைப் பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் என்றாலும், அவருடன் இணக்கமாக இருந்தார். வலைப் பயிற்சியில் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு ஆலோசனைகளை அளித்தார். உலகிலேயே புல் ஷாட் ஆடுவதில் சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ்-க்கு அதன் நுணுக்கங்களை கற்றுத் தந்து உதவினார்.


Click it and Unblock the Notifications