கொழும்பு : இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக இலங்கை அணி ஒரு நாள் தொடரை இழந்து இருக்கிறது. இதனால் இலங்கை ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பேட்டிங்கில் நன்றாக விளையாடினார். மற்ற எதிலும் இந்திய அணி சுமாராக கூட விளையாடவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, இந்த தொடரில் சில பாசிட்டிவ் விஷயங்களும் இந்திய அணிக்கு நடந்திருக்கிறது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள்.சில பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடி இருக்கிறார்கள்.
இந்த தொடரை நாங்கள் இழந்தாலும் எந்தெந்த விஷயத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் அதில் இருக்கும் நல்ல விஷயங்கள் என்ன என்பது குறித்து நாங்கள் பார்ப்போம். எந்தெந்த இடத்தில் நாங்கள் சொதப்பி இருக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் அமர்ந்து ஆராய வேண்டும்.
இலங்கைக்கு எதிரான தொடரை இழந்ததால் எங்களுடைய உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்து விடாது. நாங்கள் ஒரு அணியாக கடந்த சில ஆண்டுகளாகவே நன்றாக விளையாடி வந்து கொண்டிருக்கின்றோம். இதுபோன்ற சில தொடர்களை தோற்கும் நிலையும் வரலாம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் சொதப்பியது. கடந்த சில போட்டிகளாகவே விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் போன்ற வீரர்கள் தடுமாறி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதை அடுத்து இந்திய அணி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தான் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.