IND vs SL: மன்னிக்கவே முடியாது.. சஞ்சு சாம்சன் செய்த பிழை.. கொந்தளித்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?
பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெற்றார். தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பில் அவர் முத்திரை பதிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மோசமாக சொதப்பி ஏமாற்றம் அளித்தார். இதை அடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் குசால் பெரேரா 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இருந்தார். 162 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் ஆடத் தொடங்கியது. சுப்மன் கில்லுக்கு கழுத்து வலி இருந்ததால், சஞ்சு சாம்சன் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றதோடு, துவக்க வீரராகவும் களமிறங்கினார்.

ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் துவக்கம் அளித்தனர். முதல் ஓவரில் மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் போட்டி தாமதமானது. மழை நின்ற பின் எட்டு ஓவர்களில் 74 ரன்கள் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதல் ஓவர் முழுவதும் ஜெய்ஸ்வால் சந்தித்து, 12 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இரண்டாவது ஓவரின் ஒரு முதல் பந்தை சந்தித்தார் சஞ்சு சாம்சன். தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தீக்ஷனா வீசிய பந்தை சரியாக கணித்து ஆட முடியாமல் தடுமாறிய சஞ்சு சாம்சன் பவுல்ட் அவுட் ஆகி இருந்தார்.
இதை அடுத்து, "அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சஞ்சு சாம்சன் மோசமாக ஆடி தனது விக்கெட்டை சொற்ப ரன்களுக்கு பறி கொடுக்கிறார். அதிலும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆவதை எல்லாம் எல்லாம் மன்னிக்கவே முடியாது" என சமூக ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications