கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து வெற்றியை பெற்றது. கடைசி 2 ஓவர்களில் இலங்கை வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்று அபாரமாக வென்றது.
இந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். பந்து ஸ்பின்னாவதை அறிந்து சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தரை கடைசி நேரத்தில் பயன்படுத்தினார். அவர் வீசிய ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்ந்த நிலையில், ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது.

சிறப்பாக பவுலிங் செய்த அவர், 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஓவரிலும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சிறந்த பங்களிப்பை அளித்தார்.
இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த டி20 தொடரில் ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்த நிலையில், அந்த ஒரு வாய்ப்பிலேயே தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலமாக அக்சர் படேலுக்கு நிகரான வீரர் என்று கம்பீர் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் மறுமுனையில் சஞ்சு சாம்சன் கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டைவிட்டுள்ளார். 2வது டி20 போட்டியில் டக் அவுட்டான சஞ்சு சாம்சன், 3வது டி20 போட்டியிலும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். கடைசியாக இந்திய அணிக்காக ஆடிய 5 போட்டிகளில் 3 முறை டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஏற்கனவே துருவ் ஜுரெல், இஷான் கிஷன் ஆகியோர் காத்திருக்கும் சூழலில், சஞ்சு சாம்சன் தனது ஃபார்மையும், திறமையையும் முழுமையாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பி, ரசிகர்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற முடியாமல் இருக்கிறார். இதனால் வாஷிங்டன் சுந்தரை பார்த்து சஞ்சு சாம்சன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.