மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ரன் குவித்து வருகிறார் சிவம் துபே. அவருக்கு கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. அவரது செயல்பாடு உலகக்கோப்பையில் கலவையாக இருந்த போதும், அவர் இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி இருந்தார்.
மேலும், அவர் வேகப் பந்து வீசும் திறன் கொண்டவர். அது இந்திய அணிக்கு தற்போதைய முக்கிய தேவையாகவும் உள்ளது.
இந்திய அணியின் முக்கிய வேகப் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா திடீரென காயத்தால் ஆட முடியாமல் போனால், அவருக்கு மாற்றாக ஆட வைக்க வேக பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் யாரும் இந்திய அணியில் இல்லை.

இது கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பலவீனமாக இருந்து வந்தது. தற்போது சிவம் துபேவை வைத்து அந்த பலவீனத்தை முடிவுக்கு கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. இந்திய அணி அடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்று இருக்கும் நிலையில், அவர் ஒரு நாள் அணையில் இருந்து ஓய்வு கேட்டு விலகி இருக்கிறார்.
அந்த இடைவெளியில் சிவம் துபே ஒரு நாள் அணியில் இடம் பெற்று இருக்கிறார். புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிவம் துபேவை ஒரு நாள் அணியிலும் சேர்க்க வேண்டும் என கூறி இருப்பது தான் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக அமைந்திருக்கிறது.
சிவம் துபே இதுவரை டி20 போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடி இருக்கும் நிலையில், ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கும் என அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இதன் மூலம், இந்திய அணி நிர்வாகம் இனி சிவம் துபேவை அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக பயன்படுத்த திட்டமிட்டு வருவது தெரிகிறது. இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிவம் துபே அதிரடியாக ரன் குவித்து, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு இனி ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.