SL vs IND: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே வீரர்.. என்ன செய்தால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்?
கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சிவம் துபேவுக்கு கடைசி ஒரு நாள் போட்டியாக இருக்கக்கூடும். ஏனெனில், அவர் இந்திய டி20 அணியில் மட்டுமே இப்போதைக்கு நிரந்தர இடம் பெற்று இருக்கிறார். ஒரு நாள் அணியில் அவர் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக மட்டுமே தற்போது வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
அவர் ஒரு நாள் அணியில் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும், பந்து வீச்சிலும் ஒன்று, இரண்டு விக்கெட்களாவது வீழ்த்த வேண்டும். அதன் மூலம் அவர் இந்திய ஒரு நாள் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியும்,

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்பாக்ட் வீரராக பேட்டிங்கில் கலக்கி வந்தார். அதனால், அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்தது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்றார். இந்தியா உலகக்கோப்பை வென்றதை அடுத்து அவருக்கு இந்திய டி20 அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதே சமயம், அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே பலரும் எண்ணிய நிலையில், அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றார். ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பெறாத நிலையில், அவருக்கு மாற்று வீரராக சிவம் துபேவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சிவம் துபே 25 ரன்கள் எடுத்ததோடு, ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் பேட்டிங்கின் போது கடைசி நேரத்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தால் அந்தப் போட்டி டை ஆனது. இரண்டாவது போட்டியில் அவர் பந்து வீச்சில் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
மேலும், பேட்டிங்கில் டக் அவுட் ஆகி இருந்தார். இந்த இரண்டு போட்டிகளில் அவரது செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளது. அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்தபட்சம் அரை சதமாவது அடித்தால் தான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும். இல்லையெனில் அவர் மாற்று வீரராக கூட இந்திய ஒரு நாள் அணியில் நீடிக்க முடியாது.


Click it and Unblock the Notifications