பல்லேகேலே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் அளிப்பதில்லை என்ற விமர்சனம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கும்போதும், அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். தற்போது அவருக்கும் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது இந்திய டி20 அணியில் பேட்டிங் வரிசையில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தவிர்க்க முடியாத முதல் ஐந்து பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். அடுத்து ஆல்ரவுண்டர்கள் உட்பட ஐந்து பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஆறாவது பேட்ஸ்மேனாக ஒரு இடம் மட்டுமே மீதம் உள்ளது.
அந்த ஒரு இடத்திற்கு சிவம் துபேவுடன் மூன்று பேட்ஸ்மேன்கள் முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றிருக்கும் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகிய நால்வரில் ஒருவர் மட்டுமே ஆறாவது வரிசையில் களமிறங்க முடியும் என்ற நிலை உள்ளது. இதில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் என்ற அடிப்படையில் ரிஷப் பண்டுடன் தான் போட்டி போடுவார் என வைத்துக் கொண்டாலும், இதுவரை சிறப்பாக பேட்டிங் செய்து இருக்கும் ரிங்கு சிங்கை தாண்டி சிவன் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.
ஒருவேளை இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிவம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், சிஎஸ்கே அணி வீரர் என்பதாலேயே கவுதம் கம்பீர் சிவம் துபேவை புறக்கணித்து விட்டதாக விமர்சனம் எழும் என்பது குறிப்பிடத்தக்கது.