IND vs SL: இது ஐபிஎல் ரூல்னு தெரியாதா? சிவம் துபேவை அசிங்கப்படுத்திய கே எல் ராகுல்.. என்ன நடந்தது?
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஒருநாள் அணியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வாய்ப்பு பெற்ற சிவம் துபே அபாரமாக பந்து வீசினார். அவர் தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அதே ஓவரில், அவர் ஐபிஎல் விதி ஒன்றை ஒருநாள் போட்டியில் இருப்பதாக எண்ணி அம்பயரிடம் ரிவ்யூ கேட்க வேண்டும் என கூறினார்.
அப்போது விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் அந்த ஐபிஎல் விதி எல்லாம் ஒருநாள் போட்டிகளில் இல்லை என நினைவு படுத்தினார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து சிவம் துபேவுக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிக்கு இடையே வித்தியாசம் தெரியவில்லை என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சில் இலங்கை அணி வரிசையாக விக்கெட்களை இழந்து வந்தது. இந்த போட்டியில் பகுதி நேர வேகப்பந்து வீச்சாளராக சிவம் துபேவை பயன்படுத்தினார் கேப்டன் ரோஹித் சர்மா.
போட்டியின் 14 வது ஓவரில் சிவம் துபே தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி விக்கெட்டை வீழ்த்தினார். அதே ஓவரின் நான்காவது பந்தை அவர் வீசியபோது, அது இலங்கை பேட்ஸ்மேன் நிசங்காவின் கால் பேடை உரசி கொண்டு சென்றது. அப்போது பந்து பேட்டில் பட்டதாக நினைத்து சிவம் துபே அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அதற்கு வைட் என சிக்னல் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
அப்போது சிவம் துபே, நிச்சயமாக ஏதோ ஒரு சத்தம் கேட்டதாகவும், எனவே, இந்த பந்து வைடாக இருக்க வாய்ப்பில்லை எனவும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கூறினார். இதற்கு ரிவ்யூ கேட்கலாம் எனவும் அவர் ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனை கூறினார்.
அப்போது வேகமாக ஓடி வந்த விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் வைடுக்கு ரிவ்யூ கேட்பது என்பது ஐபிஎல் போட்டிகளுக்கான விதி என நினைவு படுத்தினார். இதை அடுத்து சிவம் துபே ஐபிஎல் மனநிலையிலேயே இருக்கிறார் என ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
பின்னர் இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அபாரமான துவக்கம் அளித்தார். அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இலங்கை அணியை சிதறடித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடி தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணி 47.4 ஓவர்களில் 230 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. இரு அணிகளும் 230 ரன்கள் எடுத்ததால் போட்டி டை-யில் முடிந்தது.


Click it and Unblock the Notifications