பல்லேகேலே: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். அதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு இரண்டு முக்கிய போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா துவம்சம் செய்து இருந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் வெற்றிக்கு அருகே வந்தும் கடைசி 6 ஓவர்களில் மோசமாக சொதப்பி தோல்வி அடைந்ததால் கோபம் அடைந்தனர்.
2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டி இருந்தது இந்தியா. அப்போது முகமது சிராஜ் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இலங்கை அணியை 55 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியிருந்தது. அப்போது முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்தக் காயத்தை இன்னும் இலங்கை ரசிகர்கள் மறக்கவில்லை. முகமது சிராஜை இலங்கை அணியின் வில்லனாகவே அவர்கள் பார்த்தார்கள்.

ஒருநாள் போட்டியில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவது என்பது அவமானமான ஒரு விஷயம் என அந்த அணியின் ரசிகர்கள் கொந்தளித்து இருந்தனர். அதற்கு பழி தீர்க்கும் வகையில் தற்போது நடந்த வரும் தொடரில் ஒரு சில வெற்றிகளை இலங்கை அணி பெற வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா - இலங்கை மோதிய முதல் டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து இருந்தன.
இலங்கை ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் இலங்கை அணி அபாரமாக சேஸிங் செய்தது. 214 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த அந்த அணி 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்த அணி கடைசி 6 ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் எடுத்து 9 விக்கெட்களை இழந்து படுதோல்வி அடைந்தது. 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதனால் அந்த அணியின் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இலங்கை அணியின் வில்லன் எனக்கு கருதப்படும் முகமது சிராஜ் கூட இந்தப் போட்டியில் சராசரியாகவே பந்து வீசினார். அப்படி இருந்தும் இலங்கை வீரர்கள் வெற்றி பெறவில்லை என அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கை அணி முதலில் சிறப்பாக சேஸிங் செய்த போது தங்கள் அணி வெற்றி பெறப் போகிறது என ஆர்வத்துடன் போட்டியை பார்த்து வந்த ரசிகர்கள், பின்னர் கிடைத்த மோசமான தோல்வியால் மைதானத்திலேயே தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். பலரும் பதாகைகளை தூக்கி எறிந்தும், வசவு வார்த்தைகளால் திட்டியபடியும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.